
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நவம்பர் 10 அன்று ஓய்வுபெறுகிறார். நவம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்கிறார். மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எக்ஸ் தளப் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2019-ல் தில்லி உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்துக்குப் பதவி உயர்வு பெற்றார். இவர் மே 13, 2025-ல் ஓய்வு பெறுகிறார்.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நடைமுறையை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்தாண்டு தீர்ப்பு வழங்கியது. தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலையில் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த அமர்வுகளில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா இடம்பெற்றிருந்தார்.
இதுபோன்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள் வழங்கிய அமர்வுகளில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா இடம்பெற்றிருக்கிறார்.