5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சீனா இடையே நேரடி விமான சேவை: அடுத்த மாதம் தொடக்கம்? | India China | Modi

இந்த உச்சிமாநாடு `ஒற்றுமை, நட்பு மற்றும் பலனளிக்கும் முடிவுகளுக்கான கூட்டமாக இருக்கும்’ என்று நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சீனா இடையே நேரடி விமான சேவை: அடுத்த மாதம் தொடக்கம்? | India China | Modi
ANI
1 min read

5 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயன நேரடி விமான சேவைகள் அடுத்த மாத தொடக்கத்தில் மீண்டும் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக ப்ளூம்பெர்க் இன்று (ஆக. 12) செய்தி வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான அறிகுறியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, குறுகிய கால அறிவிப்பில் சீனாவிற்கு விமானங்களை இயக்கத் தயாராக இருக்கும்படி ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்களிடம் மத்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கடந்த ஜூன் 2020-ல் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடு துருப்புக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா உறவுகள் பதற்றமான நிலையை எட்டின. பல தசாப்தங்களுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ராணுவ மோதல், இரு நாட்டு உறவுகளில் கடுமையான சரிவுக்கு வழிவகுத்தது.

இருப்பினும், கடந்த சில மாதங்களாக பதற்றங்களைத் தணிக்க இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், பதற்றம் குறைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இந்த மாத இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி சீனாவின் தியான்ஜினுக்குச் செல்ல உள்ளார், இது 2019-க்குப் பிறகு சீனாவிற்கு அவர் மேற்கொள்ளவுள்ள முதல் பயணமாகும். பிரதமர் மோடியின் வருகையை வரவேற்றுள்ள சீனா, இந்த உச்சிமாநாடு `ஒற்றுமை, நட்பு மற்றும் பலனளிக்கும் முடிவுகளுக்கான கூட்டமாக இருக்கும்’ என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய மாதங்களில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்ந்த கூட்டங்களில் கலந்துகொள்ள சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in