ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி 12 மாதங்கள் பெற்று வந்த சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் உறுதி செய்யப்படும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min read

மத்திய அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்தை உறுதி செய்யும் வகையிலான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.

"அரசு ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஓய்வூதியமாக 50 சதவீதத்தை உறுதி செய்வது இந்தத் திட்டத்தின் முதல் தூண். குடும்ப ஓய்வூதியம் உறுதி செய்யப்படுவது இரண்டாவது தூண். இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் 23 லட்ச மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்படும்" என்றார் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.

50 சதவீதம் உறுதி செய்யப்படும் ஓய்வூதியம் குறித்து விளக்கமளித்த அவர், "ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி 12 மாதங்கள் பெற்று வந்த சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் உறுதி செய்யப்படும். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும்" என்றார். குறைந்த 10 ஆண்டுகளுக்கும் குறைவாக பணியில் நீடித்திருந்தால் இந்தத் தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் குறையும்.

ஓய்வூதியதாரர் மறைந்துவிட்டால் அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக உறுதி செய்யப்படும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியில் இருந்திருந்தால், மாதந்தோறும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 10 ஆயிரம் உறுதி செய்யப்படும்.

இந்தத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக மத்திய அரசு அமைத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா, மஹாராஷ்டிரம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அரசு ஊழியர்களிடம் இருந்து எதிர்ப்புகள் வந்தன. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த ஹிமாச்சலப் பிரதேசம் (2023), ராஜஸ்தான் (2022), சத்தீஸ்கர் (2022) மற்றும் பஞ்சாப் (2022) ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்ட நடைமுறைக்கு மாறின.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in