

மஹாராஷ்டிர முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு, வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. கடந்த 2018 கேரள பெருவெள்ளத்தின்போது, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற அம்மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருந்தது.
வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற வழிவகை செய்யும் `வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டம், 2010-ன்’ (FCRA) கீழ் ஒரு மாநில அரசின் நிவாரண நிதிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்குவது இதுவே முதல்முறை.
இயற்கை பேரிடர்கள், மிகப்பெரிய அளவிலான விபத்துகள், வகுப்புவாத கலவரங்கள், பயங்கரவாத தாக்குதல்கள் அல்லது மருத்துவ மற்றும் கல்வி உதவி தேவைப்படுபவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக செயல்படும் மஹாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக் கணக்கில், கூடுதலாக நிதி உதவி பெறுவதற்காகவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாகவே, மாநில அரசுகளின் நிவாரண நிதிகள் உள்நாட்டில் பெறப்படும் நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகள் ஆகியவற்றின் மூலமே இயங்குகின்றன. தற்போது வெளிநாடுகளிலிருந்து நிதி பெற முதல்முறையாக மஹாராஷ்டிரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்ள கடந்த மார்ச் 2020-ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைக்கப்பட்ட பி.எம். கேர்ஸ் நிதிக்கு, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியது.
நடப்பாண்டில் 244 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு, வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. நேற்றைய (மே 30) கணக்குப்படி நாட்டில் செயல்படும் 16,141 அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவு பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.