
உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் பாயும் கங்கை, யமுனை நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவையாக உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உ.பி.யின் பிரயாக்ராஜ் மாவட்டத்தின் வடக்கில் கங்கை நதியும், தெற்கில் யமுனை நதியும் பாய்கின்றன. திரிவேணி சங்கமம் பகுதியில் வைத்து கங்கை நதியில், யமுனை நதி கலக்கிறது. கடந்த ஜன.13-ல் மஹா கும்பமேளா தொடங்கியதில் இருந்து இந்த திரிவேணி சங்கமம் பகுதியில் இதுவரை 54.31 கோடி மக்கள் புனித நீராடியுள்ளார்கள்.
இந்நிலையில், பிரயாக்ராஜில் பாயும் கங்கை, யமுனை நதிகளில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா, நிபுணர் உறுப்பினர் செந்தில்வேல் அமர்வு மேற்கொண்டு வந்தது.
பிரயாக்ராஜில் பாயும் நதிகளில் உயர்ந்துள்ள மாசுபாடு குறித்து, பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்தது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
அந்த அறிக்கையில், `பிரயாக்ராஜில் கங்கை, யமுனை சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஃபீக்கல் கோலிஃபார்ம் (Faecal coliform) என்ற பாக்டீரியா அளவுக்கதிமாக இருக்கின்றது, பிரயாக்ராஜில் தொடர்ந்து மக்கள் மேற்கொண்ட புனித நீராடலால் இந்த பாக்டீரியாவின் அளவு அதிகரித்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முன்பு அளிக்கப்பட்ட உத்தரவை உ.பி. மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பின்பற்ற தவறியதாக நேற்று (பிப்.17) அதிருப்தி தெரிவித்த பசுமைத் தீர்ப்பாயம், இது தொடர்பாக பதிலளிக்க உ.பி. அரசுக்கு ஒரு நாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை மீண்டும் நாளை (பிப்.19) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.