
துபாயில் சாலைகளை மேம்படுத்த அந்நாட்டு இளவரசர் தன்னை அழைத்ததாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
நாடு முழுவதும் தற்போல் பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இதனால் மக்களின் பயண நேரம் கணிசமாகக் குறைந்து வருவது நன்மை என்றாலும், இவற்றின் பராரிப்பு பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இதனால், டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டு, ஆண்டுதோறும் விலை அதிகரிக்கப்பட்டும் வருகிறது.
மறுபுறம், சாலைகளின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர். மேலும் பல சாலைப் பணிகள் இன்னும் முழுமை அடையாத நிலையில் உள்ளன. ஆனாலும் அப்பகுதியைக் கடக்கும்போது டோல்கேட்டில் பணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மேலும், இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. அதேபோல் பல இடங்களில் பாலங்களும் முழுமையாக கட்டாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் துபாயில் சாலை திட்டங்களை மேம்படுத்தத் தன்னை துபாய் இளவரசர் அழைத்ததாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ”இந்தியா வந்திருந்த துபாய் இளவரசர் பிரதமர் மோடியிடம் தயவுசெய்து கட்காரியை 6 மாதங்களுக்கு துபாய்க்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்டார்கள். இதற்கான காரணம், எனது தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை உலக சாதனை செய்துள்ளது. அருணாசல பிரதேசம், மேகாலயா, திரிபுரா ஆகிய இடங்களில் சிறப்பான முறையில் சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள்மகிழ்ச்சியில் உள்ளனர்”
இவ்வாறு பேசினார்.