தில்லி கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம்: புதிய திட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசு!

ரயில் தாமதமாகும் நேரங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லி கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம்: புதிய திட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசு!
ANI
1 min read

தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் 18 பேர் உயிரிழந்த விவகாரத்தை அடுத்து, ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்களைக் கட்டுப்படுத்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது மத்திய அரசு.

உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளாவில் நடைபெற்று வருகிறது. பிரயாக்ராஜ் செல்லும் ரயிலில் ஏறுவதற்காக நேற்று முன்தினம் (பிப்.15) இரவு நேரத்தில் புது தில்லி ரயில் நிலையத்தின் 13, 14 வது நடைமேடையில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தார்கள்.

நடைமேடையில் ரயில் வந்தபிறகு, அதில் ஏறுவதற்கு ஒரே நேரத்தில் ஏராளமானோர் முயற்சி செய்ததால் அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தார்கள். இந்நிலையில், ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்களை சமாளிக்க மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் அதிக அளவில் கூடும் 60 ரயில் நிலையங்களில், மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நிரந்தர வசதிகள் ஏற்படுத்தவும், ரயில் தாமதமாகும் நேரங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது இந்தியா டுடே.

குறிப்பாக, கேமராக்களை உபயோகித்து ரயில் நிலையங்களில் உள்ள நடைமேம்பாலங்கள் மற்றும் படிக்கட்டுகளை தீவிரமாகக் கண்காணிக்கவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ரயில் நிலைய அதிகாரிகளுக்குப் போதிய பயிற்சிகளை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்குப் பிறகு, பிரயாக்ராஜ் ரயில் நிலையத்துடன் இணைந்திருக்கும் 35 ரயில் நிலையங்களை மத்திய கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ரயில்வே துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in