
பஞ்சாப்-ஹரியானா எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நம்பிக்கையின்மை நிலவுகிறது. இதை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்ற அமர்வு.
கடந்த பிப்ரவரி மாதம் தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்த தில்லி நோக்கிப் பேரணியை அறிவித்தன பஞ்சாப் விவசாய அமைப்புகள். அறிவிப்புப்படி கிளம்பிய பஞ்சாப் விவசாயிகள் பஞ்சாப் ஹரியானா எல்லைப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ஷம்புவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் முன்னேறிச் செல்ல முடியாத அளவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் உருவாக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 13-ல் இருந்து ஷம்புவில் இருந்தபடி பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த தடுப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புய்யான் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று (ஜூலை 24) விசாரித்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், `மக்கள் நலன் அரசாக இருந்தாலும் விரும்பத்தகாத விஷயங்கள் நடக்கும்போது அதை அனுமதிக்க முடியாது. ஜேசிபி போன்ற பெரிய வாகனங்களுடன் அச்சுறுத்தல் ஏற்படுத்துவது போல உள்ளது விவசாயிகளின் நடவடிக்கை’ என்றார்
பஞ்சாப் சார்பில் ஆஜரான அம்மாநில அரசு தலைமை வழக்கறிஞர் குர்மீத் சிங், `தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டிருப்பதால் பொருளாதார ரீதியில் பஞ்சாப்புக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், `விவசாயிகளைச் சந்திக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். எதற்காக அவர்கள் தில்லிக்கு வர முயற்சி செய்கிறார்கள்? நீங்கள் இங்கிருந்து அமைச்சர்களை அனுப்புகிறீர்கள் இருந்தாலும் ஒரு நம்பிக்கையின்மை இருக்கிறது. இதனால் நீங்கள் சுய நலத்தை யோசித்து செயல்படுகிறீர்கள் என்று அவர்கள் நினைக்கக்கூடும். ஏன் ஒரு பொதுவான நபரை அவர்களுடன் பேச நீங்கள் அனுப்பக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.
மேலும், `2 வாரங்களுக்குள் இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு மாநில அரசுகளும் பேசி, தடுப்புகளை படிப்படியாக அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.