ஆஃப்ரிக்க நாடுகளில் தற்போது அதிவேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மை வைரஸின் புதிய வகையான கிளாட் 1 மூலம், இந்தியாவின் முதல் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ள கேரள நபர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று மத்திய சுகாதார அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 14-ல் குரங்கு அம்மை என்று அழைக்கப்படும் மங்கி பாக்ஸ் நோய் பரவல் குறித்த உலகளாவிய சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது உலக சுகாதார மையம்.
குரங்கு அம்மை நோய்க்குக் காரணமான வைரஸின் மாறுபட்ட புதிய வகையான கிளாட் 1 தற்போது ஆஃப்ரிக்க நாடுகளில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தப் புதிய மாறுபட்ட கிளாட் 1 வைரஸால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் நபர்கள் மீது மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.
சமீபத்தில், துபாயிலிருந்து கேரளாவுக்கு வந்த 38 வயது நபருக்குக் குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதை அடுத்து சிகிச்சைக்காக அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த செப்.9-ல் அந்நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று (செப்.23) மத்திய சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் வர்மா, கேரளாவில் குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் குரங்கு அம்மை வைரஸின் புதிய வகையான கிளாட் 1 மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.