குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை கோரிய மனு: மத்திய அரசு எதிர்ப்பு

இந்த வகையில் சட்டமியற்றவேண்டும் என்று நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.
குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை கோரிய மனு: மத்திய அரசு எதிர்ப்பு
1 min read

கிரிமினல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகள் தேர்தல்களில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்கக்கோரிய மனுவிற்கு எதிராக வாதங்களை தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு.

கிரிமினல் குற்றவாளியாக நீதிமன்றங்களால் அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தல்களில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்கக்கோரி கடந்த 2016-ல் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8 மற்றும் 9 ஆகியவை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளதாக அவரது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

குறிப்பிட்ட சில குற்றங்களுக்காக சிறை தண்டனை பெற்ற நபர்கள், தண்டனை காலத்திற்குப் பிறகு தேர்தல்களில் போட்டியிட 6 வருடங்கள் தடை விதிக்கிறது பிரிவு 8. அதேநேரம், ஊழல் மற்றும் தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் 5 வருடங்கள் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கிறது பிரிவு 9.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் விதிக்கும் இந்த தடையை வாழ்நாள் முழுவதும் நீட்டிக்கக்கோரி தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார் அஷ்வினி உபாத்யாய. இந்நிலையில், `வாழ்நாள் தடை தொடர்பான கேள்வி சரியா, தவறா என்பது நாடாளுமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்ட விவகாரம்.

இந்த வகையில் சட்டமியற்றவேண்டும் என்று நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை’ என்று இந்த வழக்கில் பதில் வாதத்தை முன்வைத்துள்ளது மத்திய அரசு.

மேலும், பல்வேறு தண்டனைச் சட்டங்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிப்பதற்கான கால அளவை நிர்ணயிப்பதாகவும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட விதிக்கப்படும் தடையை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக கருதமுடியாது என்றும் வாதங்களை வைத்துள்ளது மத்திய அரசு.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in