குரங்கு அம்மை நோய்ப் பரவலைத் தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் இரண்டாவது குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 14-ல் மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த உலகளாவிய சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது உலக சுகாதார மையம். குரங்கு அம்மை நோய்க்குக் காரணமான வைரஸின் மாறுபட்ட புதிய வகையான கிளாட் 1 தற்போது ஆஃப்ரிக்க நாடுகளில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
இதை அடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் நபர்கள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தியது மத்திய அரசு. அதன் அடிப்படையில் சமீபத்தில் துபாயிலிருந்து கேரளாவுக்கு வந்த 38 வயது நபருக்கு மாறுபட்ட புதிய வகையான கிளாட் 1-ன் மூலம் குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து மத்திய சுகாதார அமைச்சகம், அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் குரங்கு அம்மை நோய் குறித்த ஆலோசனை வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, சந்தேகத்திற்கிடமான மற்றும் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குரங்கு அம்மை பாதிப்பில் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளைக் கொண்ட நோயாளியின் தோல் புண்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். இதில் தொற்று உறுதிசெய்யப்பட்டால், அந்த மாதிரியை புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்குத் திரும்பிய 26-வயது இளைஞருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பதை இன்று காலை மத்திய அரசு உறுதிசெய்துள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்ட கேரள இளைஞருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.