
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் மின்னணு சாதனங்கள் ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் சீனாவில் இருந்து ஏராளமான மின்னணு சாதனங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த இறக்குமதிகளில் சிசிடிவி கேமராக்கள், ஸ்மார்ட் மீட்டர்கள், ட்ரோன் உதிரிபாகங்கள், மடிக்கணினிகள், மேசைக் கணினிகள், பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடக்கம்.
இந்த சாதனங்களில் சிப்களை பொருத்தி தகவல்களை சீனா திருடுவதாகப் புகார் எழுப்பப்பட்டு வந்தது. இதனை அடுத்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாகப் பரிசோதிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய அரசின் உத்தரவு இந்த மாதம் செயல்பாட்டுக்கு வந்தது.
முதற்கட்டமாக அரசு அலுவலகங்களில் பயன்பாட்டிலுள்ள சிசிடிவிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின் படிப்படியாக சில்லறை வர்த்தக சந்தைகளில் விற்கப்படும் சிசிடிவி கேமராக்களுக்கும் சோதனை விரிவுபடுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதன் பின்னணியில் இஸ்ரேலின் உளவுத்துறையான மொஸாட் இருப்பதாகக் கூறப்பட்டது.
லெபனானில் வெடித்த இந்தப் பேஜர்களை ஹங்கேரியைச் சேர்ந்த பிஏசி கன்சல்டிங் நிறுவனம் தயாரித்துள்ளது. அதே நேரம் தைவானில் செயல்படும் கோல்ட் அப்போலோ நிறுவனத்தின் பெயரில், அதனிடம் உரிமம் பெற்று இந்தப் பேஜர்களை ஹங்கேரியின் பிஏசி கன்சல்டிங் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் லெபனான் பேஜர் வெடிப்பு சம்பவத்தை முன்வைத்து, சீனாவில் இருந்து இருக்குமதி செய்யப்படும் பல வகையான மின்னணு சாதனங்களை ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.