
கூட்டுறவு அடிப்படையில் ஓட்டுனர்களுக்குப் பலனளிக்கும் வகையில் `ஷாக்கார் டாக்ஸி’ என்கிற புதிய டாக்ஸி சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருக்கிறார்.
தனியார் பயண செயலிகளான ஊபர், ஓலா மற்றும் ராப்பிடோ ஆகியவற்றை உபயோகித்து ஆட்டோ, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் பதிவு செய்து தேவைப்படும் இடங்களுக்கு எளிதாகப் பயணிக்க முடியும். அண்மைக் காலமாக இந்திய மக்களிடையே இந்த செயலிகளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்து வருகிறது.
அதேநேரம், இந்த செயலிகளை உபயோகப்படுத்தும் பயனாளிகளின் கைப்பேசி வகைகளை முன்வைத்து பாரபட்சமான முறையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஐஃபோன்களுக்கு ஒரு வகையான கட்டணமும், ஆண்ட்ராய்டு வகை ஃபோன்களுக்கு ஒரு வகையான கட்டணமும் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டுறவு அடிப்படையில் ஓட்டுனர்களுக்குப் அதிக பலனளிக்கும் வகையில் `ஷாக்கார் டாக்ஸி’ என்கிற புதிய டாக்ஸி சேவையை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
ஓலா, ஊபர் செயலிகளின் அடிப்படையில் இந்த ஷாக்கார் டாக்ஸி கட்டமைக்கப்படவுள்ளது. இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கல் கூட்டுறவு அமைப்புகளிடம் நேரடியாகப் பதிவு செய்து, இடைத்தரகர்களின் இடையூறு இல்லாமல் வருவாயைப் பெற முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.