காவல்துறையினர் கடவுள் அல்ல; அனைத்திற்கும் ஆர்சிபிதான் பொறுப்பு: மத்திய நிர்வாக தீர்ப்பாயம்

காவல்துறையிடம் உரிய அனுமதி அல்லது ஒப்புதலை ஆர்சிபி பெறவில்லை.
மத்திய நிர்வாக தீர்ப்பாயம்
மத்திய நிர்வாக தீர்ப்பாயம்
1 min read

கடந்த ஜூன் 4-ல் ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின்போது பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயம், கூட்ட நெரிசல் விவகாரத்திற்கு ஆர்சிபி அணிதான் பொறுப்பு என்று கூறியுள்ளது.

ஜூன் 4-ல் கூட்ட நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 9-ல் ஐந்து காவல்துறை அதிகாரிகளை கர்நாடக மாநில அரசு பணியிடை நீக்கம் செய்தது. இதை எதிர்த்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெங்களூரு மேற்கு கூடுதல் காவல் ஆணையர் விகாஸ் குமார் விகாஸ் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகினார்.

கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்து விரிவாக விசாரித்த தீர்ப்பாயம், விகாஸ் குமார் விகாஸின் பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.

அத்துடன், பெங்களூரு காவல் ஆணையர் தயானந்தா மற்றும் துணை காவல் ஆணையர் சேகர் ஹெச். தெக்கன்னவார் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய பரிசீலிக்குமாறு கர்நாடக அரசுக்குத் தீர்பாயம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இது தொடர்பான தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவில், `முதற்கட்டமாக, மூன்று முதல் ஐந்து லட்சம் பேர் கூடியதற்கு ஆர்சிபிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று தோன்றுகிறது. காவல்துறையிடம் உரிய அனுமதியையோ அல்லது ஒப்புதலையோ ஆர்சிபி பெறவில்லை.

திடீரென சமூக ஊடக வலைதளங்களில் அவர்கள் பதிவிட்டனர், அதன் விளைவாகவே பொதுமக்கள் கூடிவிட்டனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

வெற்றிக் கொண்டாட்டம் குறித்து ஜூன் 4-ல் ஆர்சிபியின் சமூக வலைதளக் கணக்கில் அறிவிக்கப்பட்டது. ஆர்சிபியின் இந்த கடைசி நிமிட கொண்டாட்ட அறிவிப்பை விமர்சித்துள்ள தீர்ப்பாயம், அதை `தொந்தரவு’ என்று குறிப்பிட்டுள்ளது.

`திடீரென்று, எந்த முன் அனுமதியும் இல்லாமல் மேற்கூறிய தொந்தரவை ஆர்சிபி உருவாக்கியது. காவல்துறை சட்டம் அல்லது பிற விதிகள் அடிப்படையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சுமார் 12 மணிநேரத்திற்குள் காவல்துறை செய்து முடிக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது’ என்று தீர்ப்பாயத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

`காவல்துறையினரும் மனிதர்கள்தான். அவர்கள் `கடவுள்’ (பகவான்) அல்ல, மந்திரவாதியும் அல்ல, மேலும் ஒரு விரலைத் தேய்த்தால் மட்டுமே எந்த விருப்பத்தையும் நிறைவேற்றக்கூடிய அலாவுதீன் பூதம் போன்ற மந்திர சக்திகளும் அவர்களிடம் இல்லை’ என்று உத்தரவில் குறிப்பிட்டு, காவல்துறையினருக்கு தீர்ப்பாயம் ஆதரவு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in