2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியீடு!
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசிதழில் இன்று (ஜூன் 16) அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த 2011-ல் இரண்டு கட்டங்களாக நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. வழக்கமாக 10 வருடங்களுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறும் நிலையில், கோவிட் பெருந்தொற்று அலையால் 2020 மற்றும் 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை.
இந்நிலையில், நாடு தழுவிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 அன்று தொடங்கும் என்று மத்திய அரசிதழிலில் இன்று (ஜூன் 16) அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்டின் பனி படர்ந்த பகுதிகள் மற்றும் லடாக்கில் மட்டும், முன்னதாகவே அதாவது அக்டோபர் 1, 2026-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக தலைநகர் தில்லியில் நேற்று (ஜூன் 15) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் அமித்ஷா வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் சுமார் 1.3 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள், அதிநவீன கையடக்க மின்னணு உபகரணங்களைப் பயன்படுத்தி இந்த பணியை மேற்கொள்வார்கள்’ என்றார்.
முதல்முறையாக இந்த 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக சாதிவாரி கணக்கெடுப்பும் நடைபெறும் என்று மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்தது. மிக முக்கியமாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நிறைவுபெற்ற பிறகு, மக்களவைத் தொகுதிகளுக்கான மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.