
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை முதன்முறையாக முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்துரைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குலைத் தொடர்ந்து. இந்தியா சார்பிலும் பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. மே 10 அன்று இரு நாடுகளும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டன.
இந்தச் சண்டையின்போது இந்தியாவின் 6 போர் விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் தெரிவித்தார். தொடக்கத்தில் இந்தியா சார்பில் இழப்புகள் குறித்து விரிவாக எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. பொய்ச் செய்திகளை மட்டுமே இந்தியா அதிகாரபூர்வமாக மறுத்து வந்தது.
இந்நிலையில், 6 போர் விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியதை முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான் மறுத்துள்ளார். இந்த எண்ணிக்கை முற்றிலுமாகத் தவறு என்றார் அனில் சௌஹான்.
ப்ளூம்பெர்க் டிவிக்கு அளித்த நேர்காணலில் அனில் சௌஹான் தெரிவித்ததாவது:
"போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டது முக்கியம் அல்ல. எதனால் போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்பது தான் முக்கியம். இந்தியப் போர் விமானங்கள் தாக்கப்பட்டது ஏன், என்ன தவறுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தான் முக்கியம். எண்ணிக்கை முக்கியமல்ல.
இதிலுள்ள நல்ல விஷயம் என்னவெனில், நமது யுத்தியில் நாம் மேற்கொண்ட தவறுகள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டோம். அதற்குத் தீர்வு கண்டு அதைச் சரி செய்தோம். இரு நாள்களுக்குப் பிறகு அதைச் செயல்படுத்தி நம் போர் விமானங்களை மீண்டும் பறக்கவிட்டு தொலைதூர எல்லைகள் குறிவைக்கப்பட்டன" என்றார் அனில் சௌஹான்.