
ஒரு காலத்தில் பெரியவர்களை மட்டுமே பாதிக்கக்கூடியதாக அறியப்பட்ட டைப் 2 நீரிழிவு நோய், தற்போதைய காலகட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் மிகவும் பொதுவானதாக மாறியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) 2023-ல் வெளியிட்ட அறிக்கையின்படி, நகர்ப்புற இந்திய பள்ளிக் குழந்தைகளுக்கு இடையே டைப் 2 நீரிழிவு நோயின் பரவல் கவலைக்குரிய அளவை எட்டியுள்ளது.
குறிப்பாக, 10 முதல் 19 வயதுடைய குழந்தைகளில் 1-2% டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நகரங்களில் இந்த எண்ணிக்கை 3-4% வரையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, சர்க்கரை சார்ந்த உணவுப் பொருட்களை அதீதமாக உட்கொள்வது, குறைந்துபோன விளையாட்டுப் பழக்கங்கள் போன்றவை இதற்கான காரணங்களாக மேற்கோள்காட்டப்படுகின்றன.
இந்நிலையில், இதை கட்டுக்குள் கொண்டுவர முக்கியமானதொரு முன்னெடுப்பை மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ முன்னெடுத்துள்ளது. முதற்கட்டமாக அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சர்க்கரை மன்றத்தை (sugar board) அமைக்க சிபிஎஸ்இ வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி,
1) சாக்லேட்டுகள், இனிப்புகள், சோடாக்கள் உள்ளிட்ட சர்க்கரை மிகுந்த பண்டங்களை பள்ளிகளின் சிற்றுண்டி சாலைகளில் விற்பனை செய்வதை நிறுத்தவேண்டும்.
2) அதீத சர்க்கரையை உட்கொள்வது மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரிடையே விளக்கும் வகையில் கருத்தரங்குகள் மற்றும் கருத்துப் பட்டறைகள் நடத்தவேண்டும்.
3) குழந்தைகளுக்கான சத்தான உணவுகளின் பட்டியலைப் பெற்றோருடன் பள்ளிகள் பகிர்ந்துகொள்ளவேண்டும்.
பள்ளிக் குழந்தைகளின் உணவுகளில் இருந்து சர்க்கரையை அகற்றுவதன் மூலம், உணவுப் பட்டியலை மட்டுமல்லாமல், மனநிலையையும் மாற்றும் முயற்சியில் சிபிஎஸ்இ இறங்கியுள்ளது. இதன் மூலம் உணவை வெறும் வெகுமதியாகவோ அல்லது உபசரிப்பாகவோ பார்க்காமல், தங்கள் உடலுக்கான எரிபொருளாகப் பார்க்கும்படி குழந்தைகளை சிபிஎஸ்இ ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது.