
2025-26 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 75% சதவீத வருகையை கட்டாயமாகப் பதிவு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ ஆகஸ்ட் 4 அன்று ஒரு புதிய உத்தரவை வெளியிட்டது.
சிபிஎஸ்இயின் இந்த புதிய உத்தரவு, கடந்த 2024 அக்டோபர் 9-ம் தேதியிட்ட முந்தைய சுற்றறிக்கையின் தொடர்ச்சியாகும். மேலும் சிபிஎஸ்இ தேர்வு துணைச் சட்ட விதிகள் 13 மற்றும் 14-க்கு இணங்குவதை பள்ளிகள் உறுதி செய்யும் நோக்கில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட வருகைப் பதிவை எட்டாத மாணவர்களைக் கையாள்வதற்காக ஒரு நிலையான இயக்க நடைமுறையையும் (SOP), இந்த உத்தரவுடன் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. குறிப்பாக அத்தகைய சூழலை பள்ளிகள் கையாள்வதற்கு தேவையான ஆவணங்களை இந்த நிலையான இயக்க நடைமுறை விவரிக்கிறது.
நிலையான இயக்க நடைமுறை
75% வருகை விதி மற்றும் அதில் தளர்வு கோரும் நிலை ஏற்படும்போது நீண்டகால நோய் பாதிப்பு, பெற்றோர் உயிரிழப்பு, கடுமையான அவசரநிலைகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட காரணங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற விவரங்களை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சம்மந்தப்பட்ட பள்ளிகள் தெரிவிக்கவேண்டும்.
சரியான நேரத்தில் எழுதப்பட்ட விண்ணப்பங்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் (மருத்துவ அல்லது இறப்புச் சான்றிதழ்கள் போன்றவை) மற்றும் பள்ளிகளின் பரிந்துரை போன்றவற்றால் அனைத்து விடுப்புகளும் அங்கீகரிக்கப்படவேண்டும்.
ஜனவரி 7-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பிராந்திய சிபிஎஸ்இ அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் முழுமையான வழக்குகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். தாமதமான அல்லது முழுமையற்ற சமர்ப்பிப்புகள் நிராகரிக்கப்படும். மேலும் சிபிஎஸ்இயிடம் அறிக்கை சமர்ப்பித்த பிறகு வருகைப் பதிவேடுகளில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ள அனுமதிக்கப்படாது.