
2026-ம் ஆண்டு தொடங்கி 10-ம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கவுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்கள் ஒரே கல்வியாண்டில் இரண்டு முறை பொதுத் தேர்வுகளை எழுத இந்த மாற்றம் வழிவகை செய்கிறது.
தேர்வு தொடர்பான அழுத்தத்தைக் குறைப்பதையும், மறுதேர்வுக்கு மாணவர்கள் ஒரு வருடம் முழுவதும் காத்திருக்காமல் தங்கள் செயல்திறனை உடனடியாக மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை வழங்குவதையும், இந்த புதிய நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய திட்டத்தின் கீழ், ஒவ்வொரு சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவரும் பிப்ரவரி நடுப்பகுதியில் வழக்கமாக நடைபெறும் பொதுத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
அதே நேரம் தங்களின் பொதுத்தேர்வு மதிப்பெண்களை மேம்படுத்த விரும்புவோர் அல்லது மூன்று பாடங்களில் குறைவாக மதிப்பெண் பெறுபவர்கள் மே மாதத்தில் இரண்டாவது முறையாக நடைபெறும் பொதுத்தேர்வில் கலந்துகொள்ளலாம்.
மாணவர்களுக்கு ஏற்ற வகையில் மதிப்பீடுகளை மேற்கொள்ள, புதிய கல்விக் கொள்கை 2020-ல் பட்டியலிடப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
1) 2026 கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு முறை சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்.
2) முதல் கட்டமாக பிப்ரவரியில் நடைபெறும் பொதுத்தேர்வு கட்டாயமானது. இதன் முடிவுகள் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படும்.
3) இரண்டாவது கட்டமாக மே மாதம் நடைபெறும் பொதுத்தேர்வு விருப்பத் தேர்வாகும். இதன் முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும்.
4) இரு முறை நடைபெறும் பொதுத் தேர்வுகளுக்கும் பொருந்தும் வகையில், கல்வியாண்டில் ஒரு முறை மட்டுமே உள் மதிப்பீடு (internal assessment) நடத்தப்படும்.