
சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 13) வெளியாகியுள்ளன.
நடப்பாண்டின் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 தொடங்கி ஏப்ரல் 4 வரை நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் சுமார் 16.92 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வெழுதினர். இந்நிலையில், ஏறத்தாழ 40 நாள்கள் கழித்து பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 13) வெளியாகியுள்ளன.
cbseresults.nic.in, cbse.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்கள் வழியாகவும், உமாங் செயலி, டிஜி லாக்கர், எஸ்.எம்.எஸ். ஆகியவை மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
பொதுத்தேர்வில் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 88.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 16.92 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 14.96 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வெழுதிய 91.64% பெண் மாணவர்களும், 85.70% ஆண் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 87.98% ஆக இருந்தது.
மேலும், நாட்டிலேயே அதிகமாக விஜயவாடா பகுதியின் தேர்ச்சி விகிதம் 99.60% ஆக உள்ளது. இதைத் தொடர்ந்து 2-ம் இடத்தை திருவனந்தபுரமும் (99.32%), 3-ம் இடத்தை சென்னையும் (97.39%) பிடித்துள்ளன. தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தை பிரயாக்ராஜ் (79.53%) பகுதி பிடித்துள்ளது.
பள்ளிகளைப் பொறுத்தளவில் 99.29% தேர்ச்சி விகிதம் பெற்று ஜவஹர் நவோதய வித்யாலயா பள்ளிகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. 2-வது இடத்தை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் (99.05%), 3-வது இடத்தை மத்திய திபெத்திய பள்ளிகளும் (98.96%) பிடித்துள்ளன. தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.94% ஆக உள்ளது.