

தில்லியில் விஜயிடம் சிபிஐ மேற்கொண்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், அவரிடம் அதிகாரிகள் கேட்ட கேள்விகள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தில்லியில் இரண்டாம்கட்ட விசாரணை
அதன்படி சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பரில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர். அதைத் தொடர்ந்து தில்லியில் சிபிஐ அலுவலகத்தில் இரண்டாம் கட்டமாக விசாரணைகள் நடந்தன. அப்போது தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
விசாரணைக்கு ஆஜரான விஜய்
இதற்கிடையில், விசாரணையின் முக்கிய நடவடிக்கையாக, தவெக தலைவர் விஜயிடம் விசாரணை மேற்கொள்ள சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் இன்று தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜரானார். அவருடன் தவெக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோர் தில்லி சென்றனர்.
விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகள்
விசாரணையின்போது விஜயிடம் பல முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சம்பவத்தன்று திறந்த வாகனத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த விஜய், கூட்டத்தில் மக்கள் மயங்கி விழுந்தது தெரிவாகத் தெரிந்தபோதும் பேச்சைத் தொடர்ந்தது ஏன்? மயங்கி விழுந்ததைக் கண்டதும் தண்ணீர் பாட்டில்களை விநியோகித்த விஜய், உடனடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? நிகழ்ச்சிக்கு நேரம் குறிக்கப்பட்ட பின்னர் தாமதமாக வந்து, கூட்டத்தில் அமைதியின்மையையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியது ஏன்? கூட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது உங்களுக்குத் தெரியுமா என்பது உட்பட பல கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.
டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் விசாரணை
மேலும், விஜயிடம் சம்பவத்தன்று நிகழ்ந்த அனைத்தையும் அவரது கண்ணோட்டத்தில் விரிவாக விளக்கக் கோரி சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. விஜயைத் தொடர்ந்து காவல்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
CBI questions actor Vijay in Karur stampede probe. Key issue under scrutiny is ‘7 hour delay’ at venue between scheduled start time and Vijay’s arrival. CBI took over probe from Tamil Nadu Police last October following SC order.