கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு குறித்து இன்று (செப்.17) நடைபெற்று வரும் விசாரணையில், மருத்துவரின் கொலை குறித்த முழு உண்மைகளை வெளிக்கொண்டுவர சிபிஐக்கு மேலும் அவகாசம் தேவை எனக் கருத்து தெரிவித்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
கடைசியாகக் கடந்த செப்.9-ல் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, பெண் மருத்துவரின் கொலை குறித்து 14 மணி நேரத் தாமதத்துக்கு பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக அதிருப்தி தெரிவித்தது உச்ச நீதிமன்றம். மேலும் அன்று மாலை 5 மணிக்குள் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வரும் இளநிலை மருத்துவர்கள் பணிக்குத் திரும்பக் கெடுவிதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
இதைத் தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையின்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் ரூ. 100 கோடி அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதாகவும், பெண் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி பொருத்தும் பணிகள், தனியறைகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த விசாரணை அறிக்கை குறித்துப் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், சிபிஐ தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை ஆய்வு செய்ததாகவும், அதில் இருக்கும் தகவல்களை வெளியிட்டால் விசாரணை பாதிக்கும் எனவும், வழக்கு விசாரணைக்கு சிபிஐக்கு மேலும் அவகாசம் தேவைப்படும் எனவும் கருத்து தெரிவித்தார்.
மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டுப் போராட்டம் நடத்திவரும் இளநிலை மருத்துவர்கள் பணிக்குச் சேர்ந்த பிறகு அவர்களுக்குச் சில வகையில் பாதிப்புகள் ஏற்படும் என்றார். இதற்குப் பதிலளித்த கபில் சிபல், அவர்கள் மீது மேற்கு வங்க அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காது என்று முதல்வர் மமதா பானர்ஜி உறுதி அளித்ததாகத் தெரிவித்தார்.
பிற்பகல் 1.18 மணி அளவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிறைவுபெற்று வேறொரு தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. நேற்று (செப்.16) மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும், போராட்டம் நடத்தி வரும் இளநிலை பயிற்சி மருத்துவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.