
இன்று (செப்.09) கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் தாக்கல் செய்தது சிபிஐ.
கடைசியாக கடந்த ஆகஸ்ட் 22-ல் உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, பயிற்சி மருத்துவர் கொலை தொடர்பாக விரைவாக வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்காத கொல்கத்தா மாநகரக் காவல்துறையைக் கடுமையாகச் சாடியிருந்தது உச்ச நீதிமன்றம். மேலும் பயிற்சி மருத்துவர் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வந்த மருத்துவர்களைப் பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தியது.
இந்நிலையில் இன்று காலை பயிற்சி மருத்துவர் கொலை தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்கியது உச்ச நீதிமன்றம். அப்போது சிபிஐ சார்பில் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையைத் தொடருமாறு சிபிஐ-க்கு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணை அறிக்கையை செப்.17-ல் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
மாநிலத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கு வங்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்துக் கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம். மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இது தொடர்பான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேற்கு வங்க அரசிடம் இருந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்குத் தகுந்த ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு அளித்திருந்தது மத்திய உள்துறை அமைச்சகம். இது தொடர்பாகவும் இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது.