நாடு முழுக்க சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஆர்எஸ்எஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
நாடு முழுக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் மூத்த ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே ஆர்எஸ்எஸ்-ன் தேசிய ஒருங்கிணைப்பு மாநாடு கேரள மாநிலம் பாலக்காட்டில் 3 நாள்கள் நடைபெற்றது. இது நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தலைமை செய்தித்தொடர்பாளர் சுனில் அம்பேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆர்எஸ்எஸ்-ன் நிலைப்பாட்டை விளக்கினார்.
"சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆர்எஸ்எஸ் ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளது. தேச ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மிக முக்கியமானப் பிரச்னை இது. எனவே தேர்தலுக்காகவோ, தேர்தல் நடைமுறைகளுக்காகவோ, அரசியலுக்காகவே அல்லாமல் இதை மிகக் கவனமாகக் கையாள வேண்டும்.
பின்தங்கியுள்ள அல்லது சிறப்பு கவனம் தேவைப்படும் சாதிகளின் நலனுக்காக அரசுக்குத் தரவுகள் தேவைப்படலாம். அவர்கள் கணக்கெடுப்பை நடத்தலாம். அரசு ஏற்கெனவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறது. எனவே, இதில் பிரச்னை இல்லை. ஆனால், இந்தத் தரவுகள் சம்பந்தப்பட்ட சமூகம் மற்றும் சாதிகளின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். தேர்தலுக்கான அரசியல் ஆயுதமாக இதைப் பயன்படுத்தக் கூடாது" என்றார்.