காங்கிரஸ் எம்.பி. இருக்கையின் கீழ் பணக்கட்டுகள் பறிமுதல்: நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

மாநிலங்களவைக்குச் செல்லும்போது நான் ரூ. 500-ஐ மட்டுமே என்னுடன் வைத்திருப்பேன். முதல்முறையாக இவ்வாறு கேள்விப்படுகிறேன்.
காங்கிரஸ் எம்.பி. இருக்கையின் கீழ் பணக்கட்டுகள் பறிமுதல்: நாடாளுமன்றத்தில் பரபரப்பு!
ANI
1 min read

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்கிவின் இருக்கைக்குக் கீழ் பணக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிவித்துள்ளார் மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தங்கர்.

இன்று (டிச.6) காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியதும் உரையாற்றிய மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தங்கர், `நேற்று (டிச.5) அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, எப்போதும் போல வழக்கமான முறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை எண். 222-ன் கீழ் பாதுகாப்பு அதிகாரிகள் பணக்கட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து சட்டப்படி விசாரணை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

ஜெக்தீப் தங்கரின் இந்த அறிவிப்புக்கு உடனடியாக எழுந்து கண்டனத்தைத் தெரிவித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, `இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்வதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். விஷயம் நிரூபிக்கப்படும்வரை இதுபோல பெயரைக் குறிப்பிட்டிருக்கக்கூடாது’ என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவைக்கு வெளியே பேட்டியளித்த அபிஷேக் மனு சிங்வி, `மாநிலங்களவைக்குச் செல்லும்போது நான் ரூ. 500-ஐ மட்டுமே என்னுடன் வைத்திருப்பேன். முதல்முறையாக இவ்வாறு கேள்விப்படுகிறேன். நான் அவையில் நேற்று மொத்தமாகவே 3 நிமிடங்கள் மட்டுமே இருந்தேன். அயோத்தி எம்.பி. அவதேஷ் பிரசாத்துடன் 30 நிமிடங்கள் கேண்டீனில் அமர்ந்திருந்தேன். பிறகு நாடாளுமன்றத்தில் இருந்து கிளம்பிவிட்டேன்.

ஒவ்வொரு எம்.பி.யின் இருக்கைகளையும் பூட்டும் வகையில் அந்தந்த எம்.பி.யிடம் சாவி வழங்கவேண்டும். அப்படிச்செய்தால் தங்களின் இருக்கைகளைப் பூட்டிவிட்டு அந்தந்த எம்.பி.க்கள் சாவிகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றுகொள்ளலாம். இல்லையென்றால் இதுபோல யார் வேண்டுமென்றாலும் எதாவது செய்துவிட்டு குற்றச்சாட்டு எழுப்புவார்கள்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in