
பெங்களூருவில் தற்கொலை செய்துகொண்ட ஐடி ஊழியர் அதுல் சுபாஷின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மனைவி குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீஹார் மாநிலத்தை சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் கடந்த டிச. 9-ல் பெங்களூருவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் பதிவு செய்த 90 நிமிட காணொளியில், மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினரால் பலவிதங்களிலும் தாம் துன்பத்திற்கு ஆளானதாகக் குறிப்பிட்டிருந்தார் அதுல் சுபாஷ்.
குறிப்பாக, நிகிதா குடும்பத்தினர் தன் மீது தொடர்ந்த 9 வழக்குகள் குறித்தும், கடந்த 3 வருடங்களாக உ.பி.யின் ஜான்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு குறித்தும் அதில் குறிப்பிட்டிருந்தார் அதுல் சுபாஷ். அத்துடன் 24 பக்க தற்கொலை குறிப்பையும் அவர் எழுதி வைத்திருந்தார்.
கடந்த 2022-ல், நிகிதா அளித்த புகாரை அடுத்து, அதுல் சுபாஷுக்கு எதிராக வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்தப் புகாரில் அதுல் சுபாஷின் பெற்றோர், சகோதரர் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதுல் சுபாஷின் மரணத்தை அடுத்து, அவரது சகோதரர் பிகாஸ் குமார் அளித்த புகாரின் பெயரில் நிகிதா சிங்கானியா, அவரது சகோதரர் அனுராக் சிங்கானியா, தாய் நிஷா சிங்கானியா, மாமா சுஷில் சிங்கானியா ஆகியோர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட ஜாமின் பெற முடியாத பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக பேட்டியளித்துள்ள நிகிதா சிங்கானியா, `நடந்ததற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவரது மரணத்திற்காக நாங்கள் வருந்துகிறோம்’ என்றார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறி #Mentoo பிரச்சாரம் வலுவடைந்தது வருகிறது. இதற்கிடையே விவாகரத்து வழக்குகளில் ஜீவனாம்ச தொகையை நிர்ணயிக்கும் முன்பு நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ளவேண்டிய அம்சங்கள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், பிரசன்னா பி வரலே அடங்கிய அமர்வு வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு,
1. கணவன் மற்றும் மனைவியின் சமூக மற்றும் பொருளாதார நிலை
2. மனைவி மற்றும் குழந்தைகளின் நியாயமான எதிர்கால தேவைகள்.
3. கணவன், மனைவியின் தனிப்பட்ட தகுதிகள் மற்றும் அவர்கள் பார்க்கும் வேலை.
4. கணவரின் வருமானம் மற்றும் அவருக்கு உள்ள சொத்துக்கள்
5. கணவன் வீட்டில் மனைவி அனுபவிக்கும் வாழ்க்கைத் தரம்.
6. கணவரின் நிதி நிலை, பராமரிப்புக் கடமைகள் மற்றும் பொறுப்புகள்.