
இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றதற்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மோசடி நடந்திருக்கலாம் என்பதால் காவல் துறை விசாரணை கோரி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஏப்ரல் 30, 1983-ல் இந்தியக் குடியுரிமையைப் பெற்றார். ஆனால், குடியுரிமையைப் பெறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பிறகு, 1982-ல் வாக்காளர் பட்டியலிலிருந்து சோனியா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. சோனியா காந்தி முறையாகக் குடியுரிமையைப் பெற்ற பிறகே 1983-ல் வாக்காளர் பட்டியலில் மீண்டும் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
தில்லி நீதிமன்றத்தில் மனுதாரர் விகாஸ் திரிபாதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பவன் நரங், 1980-ல் சோனியா காந்தியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டபோது, தேர்தல் ஆணையத்திடம் எந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன என்று கேள்வியெழுப்பினார். இந்த விவகாரத்தில் மோசடி நடந்திருக்கலாம் என்பதால், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் சார்பில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு செப்டம்பர் 10 அன்று விசாரணைக்கு வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையம் மீது தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக ராகுல் காந்தி விமர்சித்து வந்தார். இதற்குப் பதிலடி தரும் வகையில், பாஜக சார்பில் சோனியா காந்தி விவகாரம் வெளியில் கொண்டு வரப்பட்டது. இதுவே தற்போது தில்லி நீதிமன்றத்தில் வழக்காக மாறியுள்ளது.
Sonia Gandhi | Voter List | Delhi Court