புனேவில் கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனை விடுவித்தது மும்பை உயர் நீதிமன்றம்

வழக்கை திசை திருப்ப முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறுவனின் தந்தை மற்றும் தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
புனேவில் கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனை விடுவித்தது மும்பை உயர் நீதிமன்றம்

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் போர்சே சொகுசு காரை மது போதையில் ஓட்டி, இருவரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த 17 வயதுச் சிறுவனுக்கு ஜாமீன் அளித்து, சிறார் கண்காணிப்பு இல்லத்தில் இருந்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புனேவில் கடந்த மே 17-ல் விபத்து நடந்ததும் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் அந்தக் காரை ஓட்டிய சிறுவனை மடக்கிப் பிடித்துக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து அடுத்த 15 மணி நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது புனே நீதிமன்றம். இதற்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்ததால் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, அந்தச் சிறுவன் சிறார் கண்காணிப்பு இல்லத்தில் வைக்கப்பட்டான். மேலும் வழக்கை திசை திருப்ப முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறுவனின் தந்தை மற்றும் தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிறுவனுக்கு ஜாமீன் அளிக்கக் கோரி இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் சிறுவனின் உறவினர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில், சிறுவனை சிறார் கண்காணிப்பு இல்லத்தில் இருந்து விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கண்காணிப்பு இல்லத்திலிருந்து வெளிவரும் சிறுவன் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்த உறவினரின் பராமரிப்பில் இருப்பான் எனத் தெரிகிறது.

சிறுவனை விடுவிக்கும் உத்தரவைப் பிறப்பிக்கும் முன்பு, `சிறுவன் கடும் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறான், அவனுக்குப் போதிய மனநல ஆலோசனையைத் தர வேண்டும். எந்த சட்டப்பிரிவின் கீழ் புனே நீதிமன்றம் அளித்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது? சட்டவிரோதமான முறையில் சிறுவன் கண்காணிப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கிறான்’ என இந்த வழக்கைக் கையாண்ட விதம் குறித்து மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

கண்காணிப்பு இல்லத்திலிருந்து சிறுவன் வெளிவந்தாலும் இந்த வழக்கு குறித்த விசாரணைத் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in