
மத்திய பட்ஜெட் பாராபட்சமானது என்று எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மாநிலங்களவையில் இன்று (ஜூலை 24) பதிலளித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத் தலைநகரை மேம்படுத்த ரூ. 15,000 கோடியும், பீஹார் மாநில சாலைப்புற மேம்பாட்டுக்கு ரூ. 26000 கோடியும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, `மத்திய பட்ஜெட்டில் இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன’ என்று கூறி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
அதைத் தொடர்ந்து இன்று மாநிலங்களவை தொடங்கியதும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே, `மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு இடையே பாராபட்சம் காட்டப்பட்டுள்ளது’ என்றார்.
இதற்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `நேற்று பட்ஜெட் உரையில் நான் பேசியதை முன்வைத்து எதிர்க்கட்சிகள், மிக முக்கியமாக மூத்த தலைவர் கார்கே பேசியது துரதிஷ்டவசமானது. நான் இரண்டு மாநிலங்களைப் பற்றி மட்டுமே பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பட்ஜெட் உரையின்போது என்ன நடக்கும் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். மிக நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சி இந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கிறது. அவர்கள் நிறைய பட்ஜெட்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் குறிப்பிட முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். பட்ஜெட் உரையில் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட நேரம் இருப்பது இல்லை.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மஹாராஷ்டிர மாநிலம் வத்வானில் துறைமுகம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் மஹாராஷ்டிரத்தின் பெயர் மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. இதற்காக மஹாராஷ்டிரத்தைப் புறக்கணித்தாக அர்த்தம் இல்லை. இதற்கும் மஹாராஷ்டிர மாநிலத்துக்கு பட்ஜெட்டில் ரூ. 76000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார்.