குழந்தை திருமண தடைச் சட்டத்தை அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் வகையில் விரிவுபடுத்த முடியாது என தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
கடந்த 18 வருடங்களாக இந்தியாவில் குழந்தை திருமண தடைச் சட்டம் அமலில் இருந்துவரும் நிலையில், குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று (அக்.18) தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜராகி எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்ப்பித்தார் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஐஸ்வர்யா பட்டி.
அதில், `குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் தனி நபர் சட்டங்கள் ஆகியவற்றில் எவற்றுக்கு முன்னுரிமை அளிப்பது என சில உயர் நீதிமன்றங்கள் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளன. எனவே தனி நபர் சட்டங்களை விட குழந்தை திருமண தடை சட்டம் மேலோங்கி இருக்கவேண்டி தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்றார்.
இந்த வழக்கில் 141 பக்க தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில், `குழந்தை திருமணங்கள் பற்றி உயர் நீதிமன்றங்கள் வழங்கிய முரண்பட்ட தீர்ப்புகள் குறித்த தகவல்களை மத்திய அரசு வழங்கவில்லை, தனி நபர் சட்டங்களை விட உயர்ந்த நிலையை குழந்தை திருமண தடை சட்டத்துக்கு வழங்கும் வகையில் 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டதிருத்தம் இன்னமும் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், குழந்தை திருமண தடைச் சட்டத்தை பிற மதங்களை சார்ந்தவர்களுக்கும் பொருந்தும் வகையில் விரிவுபடுத்த முடியாது என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், குழந்தை திருமண தடை சட்ட செயல்பாட்டுக்கு தனிநபர் சட்டங்கள் தடையாக இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
குழந்தை திருமண தடை சட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தீர்ப்பில் அறிவித்துள்ளது உச்சநீதிமன்றம். மேலும் குழந்தை திருமண தடை சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு ஏற்கனவே அதிகாரம் பெற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள், இதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.