தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது: நிர்மலா சீதாராமன்

தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது: நிர்மலா சீதாராமன்
படம்: யூட்யூப் | நிர்மலா சீதாராமன்
1 min read

தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (வியாழக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து, நெல்லை வர்த்தக மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நெல்லை, தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ. 6,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 1,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

மேலும், சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளைக் கடும் பேரிடர்களாக அறிவித்து மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் தில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றார்.

வெள்ளப் பாதிப்பிலிருந்து 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 21 மாலை வரை கிடைத்த அதிகாரபூர்வ தகவல்களின்படி 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறியதாவது:

"தமிழ்நாட்டில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் குறித்து டிசம்பர் 12-ம் தேதி தகவல் கொடுத்துள்ளது.

இது மிகவும் அதி நவீன மையம். 5 நாள்களுக்கு முன்பே வரக்கூடிய 5 நாள்கள் என்ன நடக்கும் என்பதை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதுதவிர, ஒவ்வொரு மூன்று மணி நேரமும், அடுத்த மூன்று மணி நேரங்களில் என்ன நடக்கப்போகிறது என்பதையும் எச்சரிக்கையாகத் தருகிறார்கள். தென் மாவட்டங்களுக்கு வந்துள்ள இந்த பேரிடர் குறித்து 12-ம் தேதியே செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

2015 வெள்ளப் பாதிப்பிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளப்படவில்லை. மாநில அளவில் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. வெள்ளத்தைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது" என்றார்.

தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்ற நிர்மலா சீதாராமன், தில்லியில் 'இந்தியா' கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றதை விமர்சிக்கும் வகையில், வெள்ளப் பாதிப்பு மீட்புப் பணியின்போது முதல்வர் எங்கே இருந்தார் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in