
அந்தமான் பகுதியில் இருக்கும் கிரேட் நிகோபார் தீவில் மேற்கொள்ளப்படவுள்ள உள்கட்டமைப்புத் திட்டத்தை மறுசீராய்வுக்கு உட்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
`கிரேட் நிகோபார் தீவில் மத்திய அரசு முன்னெடுத்துள்ள ரூ.72 ஆயிரம் கோடி செலவிலான `உள்கட்டமைப்புத் திட்டம்’ அங்கிருக்கும் பழங்குடியின மக்களுக்கும், இயற்கைச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும். 2021 மார்ச்-ல் நிதி ஆயோக்கின் முன்மொழிவால் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் பல காரணங்களுக்காக அப்போதே சர்ச்சையானது’ எனத் தன் எக்ஸ் தளத்தில் இந்தத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.
`இந்தத் திட்டத்துக்காக 13,075 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தனித்துவமான மழைக்காடுகளான கிரேட் நிக்கோபார் தீவின் பரப்பளவில் சுமார் 15 சதவீதமாகும். பாதுகாக்கப்பட்ட பகுதியான தீவில் மேற்கொள்ளப்படும் இந்த உள்கட்டமைப்புத் திட்டம் வன உரிமைகள் (2006) சட்டத்தை மீறுகிறது. வன உரிமைச் சட்டத்தின்படி ஷோம்பென் பழங்குடியின மக்களுக்கு இந்தப் பகுதியைப் பாதுகாத்து, நிர்வகிக்க முழு உரிமை உள்ளது’ என்று தன் பதிவில் எவ்வாறு இந்தத் திட்டம் சட்டத்தை மீறுகிறது என விளக்கியுள்ளார் ரமேஷ்.
மேலும், `கிரேட் நிக்கோபார் தீவில் வசிக்கும் பழங்குடியின சபை இந்தத் திட்டத்துக்கான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. உள்கட்டமைப்பு திட்டம் குறித்து இந்த சபையிடம் அந்தமான் அரசு நிர்வாகம் உரிய ஆலோசனை மேற்கொள்ளவில்லை. இந்த திட்டத்துக்காக வழங்கப்பட்ட அனைத்து வித ஒப்புதல்களையும், நாடாளுமன்ற குழுக்களின் உதவியுடன் எந்த ஒரு பாராபட்சமும் இல்லாமல் மத்திய அரசு மறுசீராய்வுக்கு உட்படுத்த வேண்டும்’ எனத் தன் பதிவின் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.
`கிரேட் நிகோபார்’ உள்கட்டமைப்புத் திட்டத்தின் மூலம் துறைமுகம், சர்வதேச விமான நிலையம், குடியிருப்புப் பகுதிகள், சோலார் மின்சக்தி நிலையம் போன்றவற்றை உருவாக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இந்தத் திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிடுமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முன்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிபுணர் குழுவை அமைத்த தீர்ப்பாயம், திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு அளித்த அனுமதி குறித்த அம்சங்களை ஆராய உத்தரவிட்டது. ஆனால் நிபுணர் குழுவின் முடிவுகள் வெளியிடப்படவில்லை.