ஒடிஷாவைத் தமிழர் ஆளுவதா? அமித் ஷா கேள்வி

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு நெருக்கமானவராக அறியப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விகே பாண்டியனை விமர்சித்துப் பேசினார்.
ஒடிஷாவைத் தமிழர் ஆளுவதா? அமித் ஷா கேள்வி

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிஷாவை ஆட்சி செய்யலாமா என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒடிஷாவின் புரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா, முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு நெருக்கமானவராக அறியப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விகே பாண்டியனை விமர்சித்துப் பேசினார்.

"நவீன் பட்நாயக்குக்கு உடல்நலம் சரியில்லை. இந்த அரசை அவர் நடத்தவில்லை. தமிழர் ஒருவர்தான் ஆட்சியை நடத்தி வருகிறார். ஒரு தமிழரை உங்களால் முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியுமா?

நவீன் பட்நாயக்குக்கு வயதாகிவிட்டது. அவரால் நிறைய செயல்பட முடியாது. மாநில அரசால் தேவையான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியாது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இரண்டு ஆண்டுகளில் 1.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம்.

ஒடியா மொழி பேசக்கூடிய, ஒடியா கலாசாரத்தை புரிந்துகொண்டு வாழக்கூடிய ஒரு மண்ணின் மைந்தனை மாநிலத் தலைவராக நியமிப்போம். ஊழல் நிறைந்த நவீன் பட்நாயக் ஆட்சியை வேரோடு களைய வேண்டும்" என்று அமித் ஷா பேசியிருந்தார்.

ஒடிஷாவில் 21 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 9 இடங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ள 12 தொகுதிகளுக்கு மே 25 மற்றும் ஜூன் 1-ல் தேர்தல் நடைபெறுகிறது. 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 13 மற்றும் மே 20-ல் இரு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள தொகுதிகளுக்கு மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய இரு கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in