
முன்பு கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட மதுபானக் கொள்கையால், தில்லி அரசுக்கு ரூ. 2,026 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது விற்பனை மூலம் தில்லி அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தை உயர்த்தும் வகையிலும், சில்லறை வணிக மது விற்பனை முறையை மறுசீரமைக்கும் வகையிலும், தில்லியில் மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதாகக் கடந்த நவம்பர் 2021-ல், அறிவித்தது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு.
இதனைத் தொடர்ந்து மதுபான கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் முறைகேடு நடந்ததாக ஜூலை 2022-ல் தில்லி துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் எழுதினார் அன்றைய தில்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமார். அதன்பிறகு, தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப் பதிந்தது சிபிஐ. இது தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே செப்டம்பர் 2022-ல், மதுபானக் மதுபானக் கொள்கையைத் திரும்பப் பெற்றது தில்லி அரசு.
இதனை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக 2023 பிப்ரவரியில் மணீஷ் சிசோடியாவும், 2024 மார்ச்சில் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று இருவரும் வெளியே உள்ளனர்.
இந்நிலையில், மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் நடந்த குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளால் தில்லி அரசுக்கு சுமார் ரூ. 2026 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி (இந்திய கணக்குத் தணிக்கையாளர்) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் குறிப்பாக, சில நிறுவனங்களுக்கு ஆதாயம் தரும் வகையில் விதிமுறைகளை தில்லி அரசு மீறியதால் இந்த வருவாய் இழப்பு ஏற்பட்டதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான வல்லுனர் குழுவின் பரிந்துரைகளை அன்றைய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புறக்கணித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.