எட்டாவது ஊதியக் குழு: உறுப்பினர்களை அறிவித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் | 8th Pay Commission |

50 லட்சம் ஊழியர்கள், 69 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் உயர வாய்ப்பு...
எட்டாவது ஊதியக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் குறித்த செய்திக்குறிப்பு
எட்டாவது ஊதியக் குழு உறுப்பினர்கள் ஒப்புதல் குறித்த செய்திக்குறிப்பு
1 min read

எட்டாவது ஊதியக் குழு உறுப்பினர்களை அறிவித்த மத்திய அமைச்சரவை, குழுவின் குறிப்பு விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் மத்திய அரசு சார்பில் ஊதியக் குழு அமைக்கப்பட்டு, அப்போது நிலவும் பொருளாதாரச் சூழல் மற்றும் விலைவாசி ஆகியவை அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்தை நிர்ணயித்து வருகிறது.

அதன்படி நாட்டின் எட்டாவது ஊதியக் குழுவை அமைக்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஊதியக் குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்படாமலும், குழுவின் குறிப்பு விதிமுறைகள் வெளியிடப்படாமலும் இருந்தது.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டாவது ஊதியக் குழுவின் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் பெங்களூரு ஐஐஎம் பேராசிரியர் புலக் கோஷ் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை செயலர் பங்கஜ் ஜெயின் ஆகியோர் ஊதியக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் சம்பளம், ஓய்வூதியம், பிற சலுகைகள் ஆகியவை குறித்து மதிப்பாய்வு செய்யும். மேலும், தற்போது நிலவும் பொருளாதாரச் சூழல், விலைவாசி ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு ஊதிய உயர்வுக்கான பரிந்துரையை மத்திய அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உயர்த்தப்படும். இக்குழு தங்கள் மதிப்பாய்வின் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏழாவது ஊதியக் குழு கடந்த 2014 பிப்ரவரியில் உருவாக்கப்பட்டது. அதன் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு 2016-ல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2026 ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “எட்டாவது மத்திய ஊதியக் குழுவின் அமைப்பு, பணிக்கான விதிமுறைகள் மற்றும் கால அளவு ஆகியவற்றுக்குப் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். இது மிக முக்கியமான முடிவாகும். இக்குழுவின் பரிந்துரை பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட ஏறத்தாழ 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்” என்று குறிப்பிட்டார்.

Summary

The Union Cabinet, chaired by PM Modi, approved the Terms of Reference of the 8th Central Pay Commission.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in