குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படாது: அமித் ஷா

"குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று சொல்ல மாநிலங்களுக்கு உரிமை இல்லை."
குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படாது: அமித் ஷா
ANI

குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படாது என்றும் பாஜக தலைமையிலான அரசு இதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 2019-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட சமயத்திலேயே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தன.

இதைத் தொடர்ந்து, சட்டம் அமலாக்கப்பட்டதும் அரசியல் தலைவர்களிடமிருந்து கண்டனங்கள் எழுந்தன. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் இந்தச் சட்டம் தங்களுடைய மாநிலங்களில் அமல்படுத்தப்படாது என்று அறிவித்தார்கள். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்தச் சட்டத்தை எதிர்த்து வருகிறார்.

இந்த நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பிரத்யேகமாகப் பேட்டியளித்துள்ள அமித் ஷா குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும், இதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்தும் நிறைய பேசியுள்ளார்.

அமித் ஷா கூறியதாவது:

"நமது நாட்டில் இந்தியக் குடியரிமையை உறுதி செய்வது நமது இறையாண்மைக்கான உரிமை. இதில் எவ்வித சமரசத்தையும் செய்துகொள்ள மாட்டோம். குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படாது.

ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்வோம் என இண்டியா கூட்டணி தலைவர்கள் கூறுகிறார்கள். தாங்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை என இண்டியா கூட்டணிக்கே தெரியும். குடியுரிமை திருத்தச் சட்டம் பாஜகவால் கொண்டு வரப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதைக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தை ரத்து செய்வது சாத்தியமற்றது. நாடு முழுக்க இந்தச் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். எனவே, இந்தச் சட்டத்தை ரத்து செய்பவர்களுக்கு ஆட்சியில் இடம் கிடைக்காது.

குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது அல்ல. சட்டப்பிரிவு 14 குறித்து மட்டும்தான் அவர்கள் எப்போதும் பேசுவார்கள். அதில் உள்ள இரண்டும் அம்சங்களை அவர்கள் மறந்துவிடுவார்கள். இது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14-ஐ மீறவில்லை. இதில் தெளிவான காரணத்துக்குரிய விளக்கம் உள்ளது. பிரிவினையின்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துக்குச் சென்றவர்களுக்கான சட்டம் இது. மத துன்புறுத்தல்களை எதிர்கொண்டு இந்தியாவுக்கு வர முடிவு செய்பவர்களுக்கான சட்டம்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நேரம் குறித்தும் விளக்கமளித்துவிடுகிறேன். ராகுல் காந்தி, மமதா பானர்ஜி, கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பொய் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். 2019 தேர்தல் வாக்குறுதிகளிலேயே இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் சட்டம் குறித்தும் தெளிவுபடுத்திவிட்டோம். 2019-ல் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், கொரோனா காரணமாக இதை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே பாஜக தனது திட்டங்களைத் தெளிவுபடுத்திவிட்டது.

யாருடைய குடியுரிமையைப் பறிப்பதற்கும் இந்தச் சட்டத்தில் இடமில்லை என்றும் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர்கள் கவலைகொள்ள வேண்டாம் என்றும் சமீபத்தில் ஏறத்தாழ 41 முறை பேசியிருக்கிறேன்.

இந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று சொல்ல மாநிலங்களுக்கு உரிமை இருக்கிறதா?. உரிமை இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். குடியுரிமை தொடர்பான சட்டங்களை இயற்றும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே வழங்கியுள்ளது. இந்தச் சட்டத்தை இயற்றுவதும், அமல்படுத்துவதும் மத்திய அரசின் பட்டியலில்தான் வருகிறது, மாநில பட்டியலில் அல்ல. குடியுரிமைக்கான விதிகளை வகுக்க அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 11, நாடாளுமன்றத்துக்கே அனைத்து அதிகாரத்தையும் வழங்கியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு அனைவரும் ஒத்துழைப்பார்கள்" என்றார் அமித் ஷா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in