சிஏஏ அமல்: ஸ்டாலின், பினராயி விஜயன், கெஜ்ரிவால் கடும் கண்டனம்!

முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளத்தில் அமல்படுத்தப்படாது - இடது ஜனநாயக முன்னணி அரசு
சிஏஏ அமல்: ஸ்டாலின், பினராயி விஜயன், கெஜ்ரிவால் கடும் கண்டனம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

கடந்த 2019 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், நாடு முழுவதும் அமலுக்கு வருவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு நேற்று அரசிதழில் வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட சமயத்திலேயே நாடு முழுவதிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தன.

இந்தச் சட்டத்தைத் தற்போது அமலுக்குக் கொண்டுவந்துள்ளதன் மூலம், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே:

"தேர்தலுக்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரிவினைவாத அரசியலில் பாஜகவின் கடைசி முயற்சி இது."

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்:

"10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு மோடி அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தேர்தலுக்கு முன்பு அமல்படுத்தியுள்ளது. நம் நாட்டில் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் பணவீக்கம் மற்றும் வேலையின்மையால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. முதலில் நம் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பையும், வீடுகளையும் கொடுக்கலாம். பிறகு மற்ற நாடுகளிலிருந்து மக்களை அழைத்து வரலாம்."

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஒவைசி:

"குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான எங்களுடைய எதிர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்கிற கோட்சேவின் சிந்தனையிலிருந்து உதித்த பிரிவினைவாதம் தான் குடியுரிமை திருத்தச் சட்டம்."

கேரள முதல்வர் பினராயி விஜயன்:

"குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் கேரளம். கேரளத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு அமல்படுத்தப்படாது என கேரள அரசு அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளத்தில் அமல்படுத்தப்படாது இடது ஜனநாயக முன்னணி அரசு என்பதை ஏற்கெனவே பலமுறை தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்:

குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் - இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு.

திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது.

இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்!"

குடியுரிமை திருத்தச் சட்டம் சொல்வது என்ன?

அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்குப் புலம்பெயரும் முஸ்லிம்கள் நீக்கமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயினர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களுக்கு இந்திய குடியுரிமையைத் துரிதமாக வழங்க வழிவகை செய்கிறது. குடியுரிமையைப் பெறும் வரை, இவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in