நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடவுளின் பெயரில் ஆங்கிலத்தில் பதவியேற்றுக் கொண்டார் சி.பி. ராதாகிருஷ்ணன்.
தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், வெங்கைய நாயுடு, ஹமீத் அன்சாரி ஆகியோர் பங்கேற்றார்கள். ஒடிஷா முதல்வர் மோகன் சரண் மாஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கங்க்வார், பஞ்சாப் ஆளுநர் குலாம் சந்த் கடாரியா உள்ளிட்டோரும் பங்கேற்றார்கள்.
குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு ஜெகதீப் தன்கரைக் காணவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், இன்றைய பதவியேற்பு விழாவில் அவர் கலந்துகொண்டார்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஜூலை 21-ல் மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 12-ல் தேர்தல் நடைபெற்றது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
CP Radhakrishnan | President Droupadi Murmu | Jagdeep Dhankar | Vice President of India |