
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (ஆக. 20) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21 அன்று மருத்துவ காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து செப். 9 அன்று காலியிடத்திற்கு தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 17 அன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்.டி.ஏ.) வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மஹாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களிடம் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி பாஜக மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.
எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணியின் வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி நேற்று (ஆக. 19) அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (ஆக. 20) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, பாஜக மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, கூட்டணிக் கட்சித் தலைவர்களான தம்பிதுரை, ராஜீவ் ரஞ்சன், எச்.டி. குமாரசாமி, ஜிதன்ராம் மஞ்சி, சிராக் பாஸ்வான், அனுபிரியா படேல், ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.