
2024-25 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தங்களின் நாற்காலியைக் காப்பாற்றும் வகையில் அமைந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
மக்களவையில் இன்று (ஜூலை 23) காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், ஆந்திரா, பீஹார் மாநிலங்களுக்கு பல முக்கிய புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் சாதாரண குடிமக்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது:
“மத்திய பட்ஜெட் தங்களின் நாற்காலியைக் காப்பாற்றுவதற்கானது. பிற மாநிலங்களின் நலன்களைச் சமரசப்படுத்திவிட்டு கூட்டாளிகளின் மாநிலங்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளன.
சாதாரண குடிமக்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை & முந்தைய பட்ஜெட்டுகளை அப்படியே படித்துள்ளனர்” என்றார்.