
மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை, மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்துள்ளதாக ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
2024-25 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
இதில், 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி மாணவர்களுக்கு தொழில்பயிற்சி வழங்குவதற்கான திட்டம் தொடங்கப்படவுள்ளதாக அறிவித்தார். மேலும், ஏஞ்சல் வரி விதிப்பு முறை முற்றிலும் ரத்து செய்யப்படுவது உட்பட பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
இந்நிலையில், “நிதியமைச்சர் தவறவிட்ட சில வாய்ப்புகளை விரைவில் பட்டியலிடுகிறேன்” என்று காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
ப. சிதம்பரத்தின் எக்ஸ் பதிவு
“தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் படித்திருக்கிறார் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் 30-வது பக்கத்தில் குறிப்பிடப்பட்ட வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்களை அவர் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி.
மேலும், இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறியதை வரவேற்கிறேன். இது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் 11-வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள வேறு சில திட்டங்களையும் அவர் பயன்படுத்துவார் என்று எதிர்பார்த்தேன். நிதியமைச்சர் தவறவிட்ட சில வாய்ப்புகளை விரைவில் பட்டியலிடுகிறேன்.
அதேபோல், ஏஞ்சல் வரி விதிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் பல ஆண்டுகால கோரிக்கையையும் ரத்து செய்துள்ளனர். இதுவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் 30-வது பக்கத்தில் இருக்கிறது” என்றார்.https://x.com/PChidambaram_IN/status/1815638125168783772