இன்று (செப்.11) அதிகாலை ஜம்மு-காஷ்மீரின் அக்னூரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைதாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையான பி.எஸ்.எஃபின் வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சுமார் 3,323 கி.மீ அளவுக்கு சர்வதேச எல்லை அமைந்துள்ளது. இந்த சர்வதேச எல்லைப் பகுதியை இந்தியத் தரப்பில் இருந்து, எல்லைப் பாதுகாப்புப்படை என்று அழைக்கப்படும் பி.எஸ்.எஃப் பாதுகாத்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து எல்லைதாண்டி இன்று இந்தியாவின் ஜம்மு பகுதிக்குள் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
` (செப்.11) அதிகாலை 2.35 மணிக்கு எல்லைக்கு அப்பால் இருந்து அக்னூர் பகுதியில் எதிர்பாராதவிதமாக துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தானின் துப்பாக்கிச்சூட்டில் ஒரு பி.எஸ்.எஃப் வீரர் காயமடைந்தார்’ என்று பி.எஸ்.எஃப் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தியத் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தரப்பில் எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் பி.எஸ்.எஃப் வீரர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 25 பிப்ரவரி 2021-ல் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தான் தரப்பிலிருந்து அவ்வப்போது எல்லைதாண்டி இந்தியாவுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஜம்முவின் ராம்கர் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய எல்லைதாண்டிய துப்பாக்கிச்சூட்டில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.