
எல்லை தாண்டி சென்றதாக பாகிஸ்தான் ராணுவத்திடம் கடந்த ஏப்ரல் மாதம் சிக்கிய இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர் பூர்ணம் குமார் ஷாவை, இன்று இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்துள்ளது.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை இன்று (மே 14) காலை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
`ஏப்ரல் 23, 2025 முதல் பாகிஸ்தான் ராணுவத்தின் காவலில் இருந்த பி.எஸ்.எஃப். வீரர் பூர்ணம் குமார் ஷா, இன்று காலை 10.30 மணியளவில் அம்ரித்சரின் அட்டாரியில் உள்ள கூட்டு சோதனைச் சாவடி வழியாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த ஒப்படைப்பு நடவடிக்கை அமைதியான முறையிலும், அமலில் உள்ள நெறிமுறைகளின்படியும் நடைபெற்றது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 23 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதற்கு மறுநாள், பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பணியாற்றிவந்த 40 வயதான எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா, தற்செயலாக இரு நாட்டு எல்லையைக் கடந்து பாகிஸ்தான் பகுதியில் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அவர் ஏறத்தாழ 3 வார காலம் இருந்தார்.
இதுபோல இரு நாட்டு ராணுவ வீரர்கள் எல்லை தாண்டும்போது ஓரிரு நாட்களில் திருப்பி ஒப்படைக்கப்படுவார்கள். ஆனால் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு எல்லையில் பதற்றம் அதிகரித்தது. அதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்திய அரசு தொடங்கியதை அடுத்து, அவரது ஒப்படைப்பு தாமதமானது.
இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து, இந்திய தரப்பிடம் இன்று (மே 14) அவர் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளார்.