
எல்லை பாதுகாப்புப் படையில் 150 நாட்டு நாய் வகைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மகாராஷ்டிர எல்லை பாதுகாப்புப் படையின் கூடுதல் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆகஸ்ட் நிகழ்ந்த பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில், இந்திய நாட்டு நாய் வகைகளின் சிறப்புகளைப் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை உட்பட பல நாட்டு நாய் வகைகளைக் குறிப்பிட்டு, அவற்றின் தனிச் சிறப்புகளைப் பட்டியலிட்டிருந்தர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் கருத்தை உத்வேகமாகக் கொண்டு எல்லை பாதுகாப்பு படையினர் 150 நாட்டு நாய் வகைகளுக்கு எல்லை பாதுகாப்புப் படைக்காக பயிற்சி கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் டெகன்பூர் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில், தேசிய நாய் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், காவல்துறை உட்பட பல்வேறு பாதுகாப்புப் படைகளில் பயன்படுத்தப்படும் நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இங்கு ஜெர்மன் ஷெப்பர்ட், லாப்ரடார் போன்ற வெளிநாட்டு நாய் வகைகளுக்குப் பாதுகாப்புப் பயிற்சிகள் கொடுப்பட்டது. இந்நிலையில்தான் பிரதமரின் கருத்தில் உத்வேகம் கொண்டு தற்போது, அம்மையில் 150-க்கும் மேற்பட்ட நாட்டு நாய் வகைகள் வளர்க்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அம்மையத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் சம்ஷேர் சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-
”ராம்பூர் முதோல் மற்றும் முதோல் ஹவுண்டு வகையிலான 150-க்கும் மேற்பட்ட நாட்டு நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த நாய்களுக்கு வெடி குண்டுகள், போதைப் பொருட்கள் போன்றவற்றைக் கண்டறிதல், கண்காணித்தல், பாதுகாத்தல், உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
அந்த மையத்தில் பயிற்சி பெற்று வரும் ரியா என்கிற முதோல் ஹவுண்டு வகை நாய், 2024 ஆண்டின் அனைத்து இந்திய காவல் பணிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல வெளிநாட்டு நாய்களை விடவும் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்றது என்பதும் தெரிய வருகிறது.