
மேற்கு வங்க மாநிலத்தைச் சீர்குலைக்கும் வகையில், எல்லைப் பாதுகாப்புப் படை அம்மாநிலத்திற்குள் வங்கதேசத்தினரை சட்டவிரோதமாக அனுமதிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார் முதல்வர் மமதா பானர்ஜி.
வங்கதேசத்தில் இருந்து நடைபெறும் ஊடுருவலால் (மேற்கு) வங்கத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவதாக சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அடுத்த ஆண்டில் மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக-திரிணாமூல் காங்கிரஸ் இடையேயான போட்டியில் இந்த பிரச்னைக்குப் பெரும் முக்கியத்துவம் இருக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மேற்கு வங்க அரசு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி, `(மேற்கு) வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவலை அனுமதிக்கிறது எல்லைப் பாதுகாப்புப் படை. எல்லையை திரிணாமூல் காங்கிரஸ் பாதுகாப்பதில்லை. எல்லை எங்களது கட்டுப்பாட்டில் இல்லை.
திரிணாமூல் காங்கிரஸ் ஊடுருவலை அனுமதிப்பதாக யாராவது குற்றம்சாட்டினால், அது எல்லைப் பாதுகாப்புப் படையின் பொறுப்பு எனக் குறிப்பிடுவேன். இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவேன்’ என்றார்.
இதைத் தொடர்ந்து வங்கதேசத்தினரின் ஊடுருவலுக்கு மமதா பானர்ஜியை குற்றம்சாட்டி மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியுள்ளவை பின்வருமாறு,
`பிடிபடுவர்கள் அனைவரும் வங்கதேசத்தினராக உள்ளனர், அவர்களில் பெரும்பாலானோரின் முகவரி (மேற்கு) வங்கத்தில் உள்ளது. வாக்குகள் மீது உள்ள பேராசையால் மமதா தீதி இதையெல்லாம் செய்து, (மேற்கு) வங்கதேச இஸ்லாமியர்கள் மற்றும் ரோஹிங்கியாக்களுக்கான நுழைவிடமாக (மேற்கு) வங்கத்தை மாற்றுகிறார்.
இதற்கிடையே வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களுக்குக் கொடுமைகள் நடக்கின்றன. ஒட்டுமொத்த உலகமும் இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது’ என்றார்.