புரூனை மன்னர் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடனான பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவின் கிழக்குக் கொள்கையிலும், இந்திய-பசிஃபிக் தொலைநோக்குக் கொள்கையிலும் முக்கியமான நாடு புரூனை என்று பேசியுள்ளார் பிரதமர் மோடி.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று (செப்.04) தென்கிழக்காசிய நாடான புரூனைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டுத் தலைநகர் பண்டார் செரி பெகவானில் புரூனை வாழ் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதை அடுத்து அங்கிருக்கும் புகழ் பெற்ற ஓமர் அலி சைஃபுதீன் மசூதிக்குச் சென்றார் பிரதமர் மோடி.
இதை அடுத்து புருனை சுல்தான் ஹசனல் பொல்கியாவை அவரது இஸ்தானா நூறுல் இமான் அரண்மனையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் மோடி. இந்த இஸ்தானா நூறுல் இமான் அரண்மனை 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனையாகும். புரூனை சுல்தானுடனான பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி பேசியவை பின்வருமாறு:
`கனிவான வார்த்தைகளுக்கும், வரவேற்புக்கும், அரச குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். புரூனையின் 40-வது வருட சுதந்திர விழாவுக்கு 140 கோடி இந்திய மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நம்மிடையே கலாச்சார ரீதியிலான பல நூற்றாண்டு கால உறவு உள்ளது. நம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் நாளுக்கு நாள் உங்கள் தலைமையில் மேலும் வலுப்பெறுகிறது. இந்தியாவின் கிழக்குக் கொள்கையிலும், இந்திய-பசிஃபிக் தொலைநோக்குக் கொள்கையிலும் முக்கியமான நாடு புரூனை’ என்றார்.
விண்வெளி, பாதுகாப்புத் துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்தும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது. இன்று (செப்.04) புருனையில் இருந்து கிளம்பி சிங்கப்பூருக்குச் செல்கிறார் பிரதமர் மோடி.