
கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டனுக்குச் சொந்தமான எஃப்-35 ரக போர் விமானம் இறுதியாக இன்று (ஜூலை 22) அந்நாட்டிற்குத் திரும்பியது.
110 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிரிட்டன் கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன எஃப்-35 பி லைட்னிங் II போர் விமானம், கடந்த ஜூன் மாதம் 14 அன்று கேரளத்தின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கேரள கடற்கரையில் இருந்து 100 கடல் மைல்களுக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பிரிட்டன் கடற்படையின் ஹெச்.எம்.எஸ். பிரின்ஸ் விமானம் தாங்கி போர்க்கப்பலில் இருந்து இந்த போர் விமானம் கிளம்பியதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரிட்டன் நாட்டில் இருந்து வருகை தந்த தொழில்நுட்ப குழுவினர் போர் விமானத்தில் ஏற்பட்டிருந்த பழுதை நீக்குவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
சிவில் விமான நிலையத்தில் பல நாள்களாக அயல்நாட்டுப் போர் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இயல்பாகவே பொதுவெளியில் கவனத்தை ஈர்த்தது. இது தொடர்பான விவாதங்களும், மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் போர் விமானத்தை பழுதுபார்க்கும் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டதாகவும், புறப்படுவதற்கு முன்பு தேவையான அனுமதிகள் பெறப்பட்டதாகவும், விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், போர்விமானம் இன்று (ஜூலை 22) பிரிட்டனுக்கு புறப்பட்டுச் சென்றது.