இந்தியாவில் என் படத்தை வைத்து மக்களை ஏமாற்றுகிறார்களா?: பிரேஸில் பெண் அதிர்ச்சி | Larissa Nery |

லாரிஸா நெரி படத்தைக் கொண்டு 10 வாக்குச்சாவடிகளில் 22 வாக்குகள் பதிவாகியுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு...
செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி (இடது), காணொளி வெளியிட்ட லாரிஸா நெரி (வலது)
செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி (இடது), காணொளி வெளியிட்ட லாரிஸா நெரி (வலது)
1 min read

இந்தியாவில் தனது படத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று பிரேஸிலைச் சேர்ந்த லாரிஸா நெரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஹரியானாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது பாஜக. இதையடுத்து, பாஜக வெற்றிபெற்ற மாநிலங்களில் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகக் காங்கிரஸின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்து ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாக நேற்று (நவ.5) தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஹரியானா தேர்தல் கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் எனக் கூறப்பட்டதாகவும், ஆனால், முடிவு பாஜக வெற்றி பெற்றதாக காட்டியது என்று கூறினார். அங்கு 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாகக் கூறிய ராகுல் காந்தி, பிரேஸிலைச் சேர்ந்த மாடலின் புகைப்படம் ஹரியானா பட்டியலில் பல பெயர்களுடன், 10 வாக்குச்சாவடிகளில் 22 வாக்குகளாக பதிவாகி இருந்தது எனக் கூறி அதற்கான படத்தை காட்டினார். அவரது பெயர் மேத்தியஸ் பெரோரோ என்றும் கூறினார்.

இதனால் அந்தப் பெண்ணின் படம் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட படமாக ஆகியது. அப்போது உண்மையில் அவர் பிரேஸிலைச் சேர்ந்த லாரிசா நெரி என்பது தெரிய வந்தது. இந்நிலையில் அவரது படம் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது அறிந்து அதிர்ச்சியடைந்ததாகக் கூறி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். போர்த்துகீசிய மொழி பேசும் அவர் அதில் கூறியுள்ளதாவது:-

“இது எனது பழைய படம். நான் 18 அல்லது 20 வயதில் இருந்தபோது எடுக்கப்பட்டது. இந்தியாவில் அதைத் தேர்தலுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்தியாவின் தேர்தலுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்திய மக்களை என்னை வைத்து ஏமாற்ற நினைக்கிறார்கள். இது என்ன பைத்தியக்காரத்தனம். நாம் எப்படிப்பட்ட உலகத்தில் வாழ்கிறோம்” என்று கேட்டுள்ளார்.

அவரை பிரேஸில் மாடல் என்று ராகுல் காந்தி குறிப்பிட்ட நிலையில் அவர் சிகை அலங்கார நிபுணர் என்றும், அந்தப் படம் தனது நண்பரான மேத்தியஸ் ஃபெரோரோவுக்காக மாடலிங் செய்தது என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தைத் தனது அனுமதியுடன் தான் அந்த நண்பர் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் என்றும் கூறியுள்ள லாரிசா, அது இலவசமாகப் பதிவிறக்கப்படும் படங்களின் வலைத்தளத்தில் கிடைக்கிறது என்றும் கூறியுள்ளார்.

Summary

Brazilian woman, Larissa Nery, has reacted with shock to her pictures being used in voter IDs in India, commenting, "What craziness is this?"

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in