
இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் முன்னாள் தலைவர் மாதவி புச் உள்ளிட்ட அதன் முக்கிய அதிகாரிகள் மீது முறைகேட்டில் ஈடுபட்டதற்காக முதல் தகவல் அறிக்கை பதிய மும்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்துள்ளது மும்பை உயர் நீதிமன்றம்.
செபியின் தலைவராக மாதவி புச் பதவி வகித்தபோது, அதானி குழுமம் வெளிநாட்டில் தொடங்கிய போலி நிறுவனங்களில் அவரும், அவரது கணவர் தாவல் புச்சும் முதலீடு செய்ததாக கடந்தாண்டு புகார் தெரிவித்திருந்தது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம்.
ஹிண்டர்பர்க் குற்றச்சாட்டை அடியோடு மறுத்து, அது தொடர்பான விளக்கத்தை மாதவி புச் அளித்தார். கடந்த மாத இறுதியில் செபி தலைவர் பதவியில் இருந்து அவர் ஓய்வுபெற்றார். இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டதற்காகவும், விதிமுறைகளை மீறியதற்காகவும் மாதவி புச் உள்ளிட்ட செபியின் முக்கிய அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய மும்பையில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தை பட்டியலிட்டுவது தொடர்பாக மிகப்பெரிய அளவில் நிதி மோசடி மற்றும் ஊழல் நடைபெற்றுள்ளதாக மஹாராஷ்டிர மாநிலம் தானேவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சபன் ஸ்ரீவத்சவா அளித்த மனுவின் பெயரில் சிறப்பு நீதிபதி எஸ்.இ. பங்கர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நடைமுறையில் உள்ள விதிமுறைகளை பூர்த்தி செய்யாத ஒரு நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்காக, கார்ப்பரேட் மோசடிக்கு துணைபோனது மூலம் தங்கள் கடமையில் இருந்து செபியின் அதிகாரிகள் தவறிவிட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் சபன் ஸ்ரீவத்சவா.
மேலும், செபி அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகளால் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இழப்புகள் ஏற்பட்டதாகவும், செபி அதிகாரிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டுச் சதியின் விளைவால் இந்த முறைகேடு நடைபெற்றதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாதவி புச், செபியின் முழு நேர உறுப்பினர்கள் அஷ்வணி பாட்டியா, ஆனந்த் நாராயணன் ஜி, கமலேஷ் சந்திர வர்ஷ்னே, மும்பை பங்குச் சந்தை நிறுவனத்தின் தலைவர் பிரமோத் அகர்வால், தலைமை செயல் அதிகாரி சுந்தரராமன் ராமமூர்த்தி ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தார்கள்.
மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு, மாதவி புச் உள்ளிட்ட பிரதிவாதிகள் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் செபி சட்டம் ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிய உத்தரவிட்டார் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி பங்கர்.
இதைத் தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து மாதவி புச் மற்றும் பிறர் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஷிவ்குமார் திக்கே, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதித்தார்.
இந்த விவகாரம் தொடர்பான விளக்கத்தை கேட்க, பிரதிவாதிகள் மாதவி புச் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்று அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதத்தை ஏற்று ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை பிறப்பித்தார் நீதிபதி திக்கே.
மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது.