
பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடை (போஷ்) சட்டம், இந்திய பார் கவுன்சில் மற்றும் மஹாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சில் ஆகியவைற்றுக்குப் பொருந்தாது என்றும், அங்கு உள் புகார் குழுக்களை (ICC) அமைக்கத் தேவையில்லை என்றும் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மூத்த வழக்கறிஞர்களுடன் பயிற்சி பெறும் ஜூனியர் வழக்கறிஞர்கள், முதலாளி-பணியாளர் உறவைக் கொண்டிருக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கடந்த 2013-ல் `பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் (போஷ் சட்டம்)’ இயற்றப்பட்டது.
இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்குப் பணியிடங்களில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தலுக்கான விளக்கம் முதல்முறையாக வரையறுக்கப்பட்டது. மேலும் இத்தகைய புகார்களை விசாரணை பணியிட அளவில் அமைக்கப்படும் உள் புகார் குழு மற்றும் அதன் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவை குறித்து இந்த சட்டம் எடுத்துரைத்தது.
இந்நிலையில், சக வழக்கறிஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்கள் மீது குறை தீர்க்கும் வழிமுறைகளை நிரந்தரமாக உருவாக்கக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் நீதிபதி சந்தீப் மார்னே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இந்த பொதுநல வழக்கு குறித்து விசாரணை நடந்தது. அப்போது, முதலாளி-பணியாளர் உறவு உள்ள பணியிட சூழல்களுக்கு மட்டுமே போஷ் சட்டம் பொருந்தும் என்று உயர் நீதிமன்ற அமர்வு விளக்கியது.
பார் கவுன்சில் அமைப்புகளில் பயிற்சி பெறும் வழக்கறிஞர்கள் அங்கு பணியமர்த்தப்படுவதில்லை என்பதால், சக வழக்கறிஞர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்படும் பாலியல் புகார்களுக்கு போஷ் சட்டம் பொருந்தாது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினார்கள்.
அதேநேரம், துன்புறுத்தல் உள்ளிட்ட தவறான தொழில்முறை நடத்தைகளுக்கான தீர்வுகளை வழக்கறிஞர்கள் சட்டத்தின் பிரிவு 35 வழங்குகிறது என்று உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.